மருத்துவக் கலந்தாய்வில் ஏற்பட்டு வரும் தாமதம், மருத்துவப் படிப்பை மட்டுமல்ல பிற தொழில்சார் படிப்புகளின் கலந்தாய்வுகளையும் பாதித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 20-ஆம் தேதி தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகளின் தாமதம் காரணமாக ஜூலை 17-ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் தமிழக அரசு அறிவித்த மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மேல்முறையீட்டிற்கு செல்லுமேயானால் மீண்டும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகும். மருத்துவக் கலந்தாய்வு தாமதத்தால் ஜூன் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு, தற்போது ஜூலை 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வேளாண் படிப்புகளுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு நிறைவு பெற்றிருந்தாலும், இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 12-ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் மருத்துவக் கலந்தாய்விற்கு பிறகுதான் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.
ஜூலை 19-ஆம் தேதி கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தாலும், மருத்துவக் கலந்தாய்வை பொறுத்து மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கால்நடை மருத்துவக் கலந்தாய்வும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கலாமா என ஆலோசிக்கப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய்வு தாமதம் அதனையும் பாதித்துள்ளது.