தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் ப்ளஸ் 2 பாடத்திட்டத்தினை மாற்றுவது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் நாளை தொடங்க உள்ள ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மையங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தனியாருடன் இணைந்து பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கல்வியில் தமிழகத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாகத் திகழ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய செங்கோட்டையன், ஆசிரியர் தேர்வில் கடைபிடிக்கப்படும் வெயிட்டேஜ் முறை பற்றி ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக ப்ளஸ் 2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், வரும் கல்வியாண்டில் ப்ளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பது குறித்து ஒருவாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.