கல்வி

தொடரும் கட்டண பிரச்னை... கடலூர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டம்

நிவேதா ஜெகராஜா

அரசுக் கல்லூரியான கடலூர் மருத்துவக் கல்லூரியில், தனியார் மருத்துவக் கல்லூரியை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, அம்மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். தங்கள் பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு, தங்கள் கல்லூரியில் அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜா முத்தையா மருத்துவம் & பல் மருத்துவக் கல்லூரியாக இருந்ததை, அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று 2021-ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் 2, 3 மற்றும் 4 ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தனியார் கல்லுரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, `அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டாலும் தொடர்ந்து பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது’ என மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரத்தில் முதலமைச்சர் இதில் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கை வலியுறுத்தி சுமார் 300-க்கும் மேற்பட்ட MBBS, BDS மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். `தனியாரை விட கூடுதல் கட்டணத்தை செலுத்தினால் தான் வகுப்புகளில் பங்கேற்க அனுமதி’ என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததைக் கண்டித்து அவர்கள் முழக்கமும் எழுப்பினர்.