கல்வி

கல்லூரிகளில் கொரோனா விழிப்புணர்வு: பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு

webteam

உயர்கல்வி நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா விழிப்புணர்வைக் கொண்டு செல்வதற்கு ஜன் அந்தோலன் என்கிற மக்கள் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், சமூக வலைதளங்கள் என அனைத்துவகையான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

இதுபற்றிய அறிக்கையை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு செயலர் ரஜ்னிஷ் அனுப்பியுள்ளார். அதில், விழிப்புணர்வு பிரச்சாரத்தில் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியவேண்டும். தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை தூய்மையாகக் கழுவுதல் ஆகிய மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிப்பேன் எனப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.