கல்வி

காலாண்டு தேர்வு நெருங்கிவிட்டது.. இன்னும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் செல்லவில்லை..!

webteam

காலாண்டு தேர்வு நெருங்கிவிட்ட சூழலில் இன்னும் பல பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் சென்றடையவில்லை.

தமிழகம் முழுவதும் இந்தாண்டு கடந்த ஜூன் மாதம் முதலே பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வார காலத்தில் காலாண்டுத் தேர்வுகளும் ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில் பல பள்ளிகளுக்கு 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் சென்றடையவில்லை என கூறப்படுகிறது.

மொழிப்பாடங்களில் தமிழை தவிர பிற மொழிப் பாடங்களை தேர்வு செய்யும் வசதியும் தமிழக மாணவர்களுக்கு உண்டு. தமிழக முழுவதும் சுமார் 22,000 மாணவர்கள் பிரெஞ்சை மொழிப்பாடமாக எடுத்து 11-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இதுதவிர ஹிந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றையும் தேர்வு செய்யும் வசதியும் உண்டு. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் மலையாளத்தை மொழிப்பாடமாக மாணவர்கள் தேர்வு செய்ய வசதி உண்டு. ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சுற்றி உள்ள மாணவர்களுக்கு கன்னட மொழி வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த மாணவர்கள் பலரும் ஜெர்மனை மொழிப்பாடமாக தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் 11-ஆம் வகுப்பில் தமிழை தவிர பிற மொழிப்பாடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் சென்றடையவில்லை. தேர்வுகள் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில் இணையதளத்தில் புத்தகங்களை பதிவேற்றம் செய்துக் கொண்டு தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களை நிர்பந்திப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரெஞ்சு ஆசிரியர்களின் இந்திய சங்கத்தின் செயலாளர் (தென் மண்டலம்) சந்திரசேகரன் கூறும்போது, மாணவர்கள் புத்தகமே இல்லாமல் தேர்விற்கு தயாராவது மிகவும் கடினமான விஷயம். விரைவில் அரசாங்கம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழை தவிர பிற மொழிப்பாடங்கள் வசதி கொண்ட பள்ளிகள் தங்களது பள்ளிகளுக்கு எத்தனை புத்தகங்கள் தேவை என்பன போன்ற விவரத்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தலைமைக் கல்வி அதிகாரிக்கு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பாடலூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவர் வளர்மதியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அனைத்து பள்ளிகளுக்கும் சரியான நேரத்தில் புத்தகங்களை வழங்கிவிட்டதாக தெரிவித்தார். இருப்பினும் கூடுதலான புத்தகங்கள் தேவைப்பட்டால் தற்போது எங்களிடம் புத்தகங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் கூடிய விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Courtesy: TheHindu