கல்வி

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம்: முதல்வர்

webteam

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். அப்போது, “கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. 3,371 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. 2500 வெண்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது. இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

அப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், “பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம். 10ஆம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான முக்கியமான தேர்வாகும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எந்தநிலையில் உள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், “தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு இரண்டாம் நிலையில்தான் உள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ‘கொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படும்’ என்று முதல்வர் கூறினார்.

இறுதியாக, “கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்க வேண்டும். பெரிய அளவில்தான் நிதி வழங்க வேண்டும் என்பதில்லை. கொரோனா தடுப்பு பணிக்காக 100 ரூபாய் கூட நிதி அளிக்கலாம்” என்று வலியுறுத்திய அவர், “அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டும் வெளியே செல்லுங்கள், மற்றபடி வீட்டிலேயே இருங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.