கல்வி

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - முதலமைச்சர் பதில்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - முதலமைச்சர் பதில்

webteam

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் வளர்ச்சி பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சேலம் மாவட்டத்தில் நோய் பரவல் தடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இன்னும் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ரயில்வே தண்டவாளத்தில் மேலே உயர்மட்ட பாலங்கள் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ள்ளனர். அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நெல் கொள்முதல் நிலையங்களில் 5 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சாதனை. நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக விவசாய உற்பத்தியை அதிகரித்து இருக்கிறோம். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மட்டுமே. அண்ணா காலத்திலிருந்து இருமொழிக் கொள்கை தான். அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டன.

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர் அல்லாத முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சூழல் எப்போது வருகிறதோ அப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும். தமிழகத்தில் இ பாஸ் வழங்குவதில் இப்போது 2 குழு அமைக்கப்பட்டுள்ளது. முறையாக இருந்தால் உடனடியாக இபாஸ் வழங்கப்படும். மேலும், இ-பாஸ் வழங்குவது எளிமையாக்கப்படும்.

எஸ்.வி.சேகர் கட்சி தலைவர் இல்லை. அவர் பேசுவதை பொருட்டாக கருதவில்லை. அவருக்கு ஆதரவாக தலைவர்கள் யாரும் பேசவில்லை” எனத் தெரிவித்தார்.