கல்வி

”முதுகலை நீட் கலந்தாய்வை உடனடியாக நடத்துக”- சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

webteam
நீட் முதுகலை மருத்து கலந்தாய்வை உடனடியாக நடத்தகோரி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவக் கல்லுரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டுக்கான முதுகலை நீட் கலந்தாய்வினை விரைந்து முடித்திட வேண்டி தேசிய அளவில் மருத்துவ மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களாக ஒ.பி.யை புறக்கணித்தும் இன்று மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இன்று தீவிர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்பட்டு வருகிறது.
போராட்டம் குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், “ஒவ்வொரு வருடமும் அகில இந்திய அளவில் 60,000 முதுகலை மாணவர்கள் பணிக்கு வருவார்கள். அதில் 4,000 மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்துக்கு பணிக்கு வருவார்கள். தற்போது ஏற்பட்டுள்ள முதுகலை கலந்தாய்வு நீட்டிப்பால், அந்த மாணவர்கள் பணிக்கு வருவது தடைபட்டுள்ளது. இது கொரோனா பேரிடர் நேரம் என்பதால், மருத்துவமனையில் ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இப்படியான நிலையில் கலந்தாய்வை தள்ளிப்போட்டுக்கொண்டே போவது, எங்களுக்கு பணி சுமையை அதிகப்படுத்துகிறது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லுரியில் மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், டிசம்பர் 13 முதல் அனைத்து விதமான சிகிச்சைகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறினர்.
இந்தியாவில் ஒமைக்ரான் பரவுல் குறித்த அச்சம் நிலவும் இந்த நேரத்தில், நாடு முழுவதும் மாணவர்கள் ஓ.பி.யை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.