கல்வி

ஆன்லைன் வகுப்பு வாய்ப்பையும் வழங்குக - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Sinekadhara

கல்வியை எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும், உடல் நலம் சரியில்லாத, மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஆன் லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நேர்வழி இயக்கம் என்ற அறக்கட்டளை, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை முன்னுரிமை அளித்து வழங்கவேண்டும் எனவும், பள்ளிகளில் காணொளி காட்சிமூலம் வகுப்புகள் நேரடியாக வழங்கவேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 18 வயதுக்கு கீழ்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியில்லை என்றும், அதற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்டு வருகிறது என்றும், 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மாற்று நாட்களில் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு நடத்தப்படும், எந்தெந்த நாளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து, அதற்கான விதிகளை வகுத்து தெரிவிக்கவேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றமும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளன என்றும் தெரிவித்தனர். மேலும், கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என தலைமை நீதிபதி அமர்வு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து, கல்வியை எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் எனவும், உடல் நலம் சரியில்லாத, மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால் வகுப்புகளை மீண்டும் துவங்க உத்தரவிடக் கோரி நேர்வழி இயக்கம் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தனர்.