தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவே கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இந்தாண்டு ஆன்லைன் மூலம் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பொறியியல் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முறையாலும், ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடத்தப்படுவதாலும் கல்லூரியை தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு அதிக அவகாசம் கிடைக்கும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னைக்கு வர வேண்டிய அவசியம் இல்லாததால் நேரவிரயமும் குறைவதாக கூறப்பட்டுள்ளது.
கவனத்தில் கொள்ளுங்கள்..
மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன்பாக செல்போன் எண், இ-மெயில் ஐடி, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிளஸ் 2 ஹால் டிக்கெட், ஆதார் எண், விண்ணப்ப பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கான டெபிட் மற்றும் கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் விவரங்களை தயாராக வைத்திருப்பது நல்லது. மாநில பாட திட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும் அண்ணா பல்கலைக்கழகமே முடிவின் விவரங்களை ஆன்லைன் மூலம் எடுத்துக் கொள்ளும்.
சிபிஎஸ்சி மூலம் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள் மட்டும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். இணையத்தில் முறையாக விண்ணப்பத்தை பதிவு செய்தவுடன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பத் தேவையில்லை. ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களை இணையதளம் மூலமாகவோ, 0 4 4 - 2 2 3 5 9 9 0 1 என்ற இலவச தொலைப்பேசி எண்ணின் மூலமோ தொடர்பு கொண்டு மாணவர்கள் தெளிவு பெறலாம்.