கல்வி

ஐஐடியின் டேட்டா சயின்ஸ் இணையவழி படிப்பு.... செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

webteam

சென்னை ஐஐடி, ஆன்லைன் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் இளநிலை இணையவழிப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 2020 -2021 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தப் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் படிப்பதற்கு ஜேஇஇ என்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். ஆனால், இந்த இணையவழி இளநிலைப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை.

இந்த இணையவழிப் படிப்பு அடிப்படைப் பட்டம், டிப்ளமோ, இளநிலைப் பட்டப்படிப்பு என மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அதாவது எந்த நிலையிலும் படிப்பில் இருந்து வெளியேறி, அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தற்போது வேறு கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இணையவழிப் படிப்பில் சேர்ந்து படிக்கமுடியும். பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர விரும்புவோர், செப்டம்பர் 15 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

விவரங்களுக்கு: www.onlinedegree.iitm.ac.in