கல்வி

பொறியியல் அரியர் தேர்வுகளை நடத்த தயார் என ஏஐசிடிஇ-க்கு கடிதமா?: அமைச்சர் அன்பழகன் விளக்கம்

webteam

அரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய தொழில் நுட்ப குழுமத்திற்கு எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறிருந்தார். இதையடுத்து ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை என்றும் அக்கடிதத்தை வெளியிட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது.

அதில், இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றும் அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல், எம்.சி.ஏ. படிப்புகளுடன் பி.இ. அரியர்ஸ் மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்ததற்கு ஏஐசிடிஇ தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அது தொடர்பாக ஏஐசிடியுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய தொழில் நுட்ப குழுமத்திற்கு எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.