கல்வி

உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர அனுமதித்திடுக: சீமான்

Veeramani

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினை தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்வி கடன்களையும் ஒன்றிய அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உக்ரைன் நாட்டிற்கு சென்று மருத்துவம் படித்த பல்வேறு இந்திய மாணவர்கள் போர் காரணமாக தாயகம் திரும்ப வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

போர்ச்சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவிகள் அவரவர் மாநிலங்களிலேயே மருத்துவப் படிப்பை தொடர இந்திய மருத்துவக் கழகமும் ஒன்றிய அரசும் அனுமதியளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மருத்துவம் பயில்வதற்காக பெற்ற வங்கி கடன்களை எவ்வித நிபநத்னையுமின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கேட்டுக் கொண்டுள்ளார்.



உக்ரைனில் இருந்து இதுவரை ஆயிரத்து 456 மாணவர்கள் திரும்பியுள்ளதாகவும், அவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர மத்திய அரசு உதவிட வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்தில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு உளவியல் ரீதியான மன ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.