கேரள மாநிலத்தில் கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தேர்வு விவகாரத்தில் தலையிட்டதை அடுத்து திங்கள் முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், மலையாள பல்கலைக்கழகம் மற்றும் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக தேர்வுகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
“அனைத்து ஆஃப்லைன் தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு துணைவேந்தர்களிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு தேர்வுக்கான புதிய தேதிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்” என கேரள மாநில ஆளுநர் அலுவலக தரப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களில் 1,04,191 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.