கல்வி

திங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை... அமைச்சர் செங்கோட்டையன்

kaleelrahman

திங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-வரை சில தளர்வுகளோடு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசும் பல தளர்வுகளோடு ஆகஸ்ட் 31வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த பள்ளி கல்வியாண்டு ஜுன் மாதம் தொடங்க இருந்த நிலையில் கொரோனா நோய் பரவலால் பள்ளிகள் திறப்பு தள்ளிக்கொண்டே போகிறது.இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,“ தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். அதேபோல வரும் திங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி வாயிலாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..


மும்மொழி கொள்கை குறித்து இதுவரை முழுவடிவிலான அறிக்கை வெளிவரவில்லை. முழுமையான அறிக்கை வந்த உடன் இது குறித்து முதல்வர் உரிய ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பார். இந்த கல்வியாண்டுக்கான பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து அரசு புதிய அட்டவணையை வெளியிட உள்ளது. இந்த கல்வியாண்டில் 20லட்சம் மாணவ மாணவிகள் அரசு பள்ளிகளில் புதியதாக சேர உள்ளனர்’” என்றார்.