கல்வி

தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி

Veeramani

நடப்பு ஆண்டில் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கடந்த கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரிகளில் சேருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை 25 விழுக்காடு வரை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் கல்லூரிகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை 10 விழுக்காடு வரை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது நடப்பாண்டில் அந்த அளவை 15 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தெரிவித்துள்ளார்.