முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்திய அமெரிக்க நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த நவம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வை தேசிய தேர்வு வாரியத்தின் சார்பில் புரோமெட்ரிக் டெஸ்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தியது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், பொறியாளர்களை தேர்வு செய்யவும், தேர்வு நடத்தும் கண்காணிப்பாளர்களை நியமிக்கவும் புரோமெட்ரிக் சிஸ்டம்ஸ் எனும் அமெரிக்க நிறுவனம், சிஎம்எஸ் ஐடி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு துணை ஒப்பந்தம் வழங்கியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சிஎம்எஸ் நிறுவனம் அபெக்ஸ் சர்வீஸஸ் என்ற வேறொரு நிறுவனத்தை ஒப்பந்தத்தில் இணைத்துக் கொண்டதாகவும், இதன் மூலம் தகுதியான தேர்வுக் கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல், தேர்வு நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பே தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்க வழி செய்வதாக இந்த நிறுவனங்களை சேர்ந்த சிலர் மாணவர்களிடம் பணம் வசூலித்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களிடமிருந்து ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வினை ஆன்லைனில் எழுதும் போது குறிப்பிட்ட கணினிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால், பணம் கொடுத்த மாணவர்களின் கணினிகளில் மட்டும் இணைய இணைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சண்டிகரில் உள்ள தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அங்குர் மிஸ்ரா என்பவர், கேள்விகளுக்கான பதிலை மாணவர்களுக்கு பேப்பர் துண்டுகளில் எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு தேர்வு மையத்துக்கு வெளியே இருந்த தரகர்கள் இணையம் மூலம் தொடர்பு கொண்டு கேள்விகளுக்கான விடைகளை அளித்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக காவல்துறையினர் ஏற்கனவே சிலரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் குற்றவியல் பிரிவு 20 பக்க குற்றப் பத்திரிகையை தயார் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது