கல்வி

படிப்புகள் முதல் வேலைவாய்ப்புகள் வரை : மீன்வளத்துறையில் A - Z வழிகாட்டுதல்

Sinekadhara

மீன்வளத்துறையில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன? அதிலுள்ள வேலை வாய்ப்புகள் என்னென்ன? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம். 

மீன்வளத்துறை படிப்புகள் வாழ்க்கையை வளமாக்கும். இதில் சுய தொழிலுக்கு கைக்கொடுக்கும் முக்கிய பாடப்பிரிவுகள் இருக்கின்றன. மீன் வளர்ப்பு முறைகள், மீன்களை பதப்படுத்துதல், மீன் உயிரியல் உள்ளிட்டவை குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் மீன்வளத்துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகளும் காத்திருக்கிறது. மீன் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 2ஆம் இடம் வகிக்கிறது. எனவே இங்கு மீன்வளத்துறை படிப்புகளால் சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். மேலும், உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் மீன்வளத்துறையில் ஆண்டுக்கு 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேவைப்படும் நிலையில் 2000 பட்டதாரிகளே வெளிவருகின்றனர்.

உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா 2ஆம் இடம் வகிக்கிறது. இந்திய அளவில் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு 7ஆவது இடம் வகிக்கிறது. இங்கு மீன்வளத்துறை படிப்புகள் மூலம் வங்கி, கல்லூரி பணிகளில் சேரலாம். மீன்வளத்துறையில் ஆய்வாளர், வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேர முடியும். வங்கிகளில் வேளாண் கடன் பிரிவு, இன்சூரன்ஸ் பிரிவுகளிலும் வேலைவாய்ப்பு இருக்கிறது. மேலும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநராக பணியில் சேரலாம்.

இதுதவிர, மீன் பதனிடும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. மீன் வளர்ப்புப் பண்ணைகளில் பொறியாளர், வடிவமைப்பு ஆலோசகராக பணியில் சேரலாம். மீன் உணவு தயாரிப்பு, மீன் சந்தைப்படுத்துதல், இறால் பண்ணை உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளும் உள்ளன.


மீன்வளத்துறை படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்:

முக்கியமாக மீன்வள அறிவியல் துறை, பி.எஃப் எஸ் சி படிப்புகளில் சேரலாம்.

துறை சார்ந்த படிப்புகள்: பி.டெக் ஃபுட் டெக்னாலஜி, பி.டெக் பயோ டெக்னாலஜி, பி.டெக் ஃபிஷரீஸ் & நாட்டிக்கல் டெக்னாலஜி

டிப்ளமோ படிப்புகள்: டிப்ளமோ - 1 வருடம், அட்வான்ஸ்ட் டிப்ளமோ - 2 வருடம், பி.வொக் வொகேஷன் - 3 வருடம்

மீன்வளப் படிப்புகள் இந்தியாவில் 4 பல்கலைக்கழகங்களிலும் , 42 கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2 பல்கலைக்கழகங்கள், 11 கல்லூரிகளில் கற்றுத் தரப்படுகிறது.

வேலை வாய்ப்புகள்: வேளாண் ஆராய்ச்சியாளர், உணவு - பண்ணை மேலாளர், மீன் வளர்ப்பு நிபுணர், மீன்வள அலுவலர், மீன்வள உயிரியலாளர்

அடிப்படை சம்பளம்: இளநிலைப் படிப்பு படித்தவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 - ரூ.30,000 மாத வருமானமும், முதுநிலைப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ. 40,000 மாத வருமானமும் கிடைக்கிறது.