கல்வி

நெல்லை: ஒரே அரசுப் பள்ளியிலிருந்து மருத்துவப் படிப்பிற்கு தேர்வான 7 மாணவிகள்

Sinekadhara

நெல்லை மாநகராட்சி அரசு பள்ளியில், அதுவும் ஒரே பள்ளியில் பயின்ற 7 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசுப்பள்ளிக்கான 7.5 ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது . இதில் கலந்துகொண்ட திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் அரசுப்பள்ளியில் பயின்று, நீட் தேர்வு எழுதி, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். நெல்லை டவுனில் செயல்படும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 4,363 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் 90 சதவிகித மாணவிகள் பொருளாதார அளவில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் பின்னணியில் பயின்று அரசு பள்ளியிலேயே நடத்தப்பட்ட நீட் தேர்விலும் வெற்றிபெற்று இன்று மருத்துவ கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 ஒதுக்கீட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகிய மூவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், காயத்ரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சௌந்தர்யா கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கிருத்திகா கோவையிலுள்ள பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரிக்கும், அப்ரின் பாத்திமா கோவை தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கும் தேர்வாகியுள்ளனர்.

இதுகுறித்து கல்லணை அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் நாச்சியார் ஆனந்தபைரவி, ‘’கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பயிற்சியை தொடங்கி விட்டோம். கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மட்டும் 32 மாணவிகள் கொரோனா காலத்திலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு பயின்று வந்தனர். இன்றைய மருத்துவ கலந்தாய்வில் ஏழு பேர் அரசுப் பள்ளிக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். இது பள்ளி மாணவிகளுக்கும், நீட் தேர்வு பயிற்சியை தடையின்றி வழங்கிய ஆசிரியர்களுக்கும் கிடைத்த வெற்றி. மாணவிகளுக்கு தேவையான அரசின் இலவச பயிற்சி கொடுக்கும் உதவியை மட்டுமே நாங்கள் செய்தோம். மாணவிகளின் ஒத்துழைப்பும், நீட் பயிற்சி ஆசிரியரின் அர்ப்பணிப்பும்தான் இந்த வெற்றிக்கு காரணம் ’’எனத் தெரிவித்தார்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியும், மாணவிகளின் சுய ஆர்வமுமே காரணம் என்கிறார் நீட் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பு ஆசிரியர் வராகி. கடந்த ஆண்டும் இதே கல்லணை அரசு பள்ளியில் பயின்ற மூன்று மாணவிகள் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த முறை எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், நம்பிக்கையையும் அடுத்த கட்டத்திற்கான தைரியத்தையும் அதிகரிக்க வைத்துள்ளது என்றார்.