டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மற்றும் இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோர் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளில், முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிவகங்கையில் வைத்து சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் தனக்கும் இந்த முறைகேட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இதனிடையே குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக காவலர்கள் சித்தாண்டி, பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டதையடுத்து ஆயுதப்படை காவலர்களாக இருந்த அவர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதிவுத்துறையில் வேலை பார்த்து வந்த ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.