(கோப்புப் படம்)
பொறியியல் படிப்பில் சேர 10 மணி நேரத்தில் 5000 பேர் விண்ணப்பித்துள்ளதாக உயர்க் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நேற்று மாலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலும் பொது கலந்தாய்வு செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேர 10 மணி நேரத்தில் 5000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 1700 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தி விட்டனர் எனவும் உயர்க் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், “கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து தற்போது நான் நலமாக வீட்டில் உள்ளேன். நான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நாளிதழ்களில் வெளியான செய்தி தவறானது. என் துறைசார்ந்த அன்றாட அலுவல் பணிகளை வழக்கம்போல் கவனித்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.