கல்வி

ஏஐசிடிஇ புதிய அறிவிப்பு - சிக்கலில் 220 தமிழக பொறியியல் கல்லூரிகள்

JustinDurai

தமிழ்நாட்டில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்து அதன் தரம், மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை  அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) எடுத்து வருகிறது. அந்த வகையில் வரும் 2022-2023ஆம் கல்வியாண்டுக்கான வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மொத்த மாணவர் சேர்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு, புதிய பாடப்பிரிவுகள் துவங்க அனுமதி வழங்கப்படாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் ( 2021-2022), மொத்த மாணவர் சேர்க்கை 50  சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 220 பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டில் ( 2022-23) புதிய பாடப்பிரிவுகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் Artificial Intelligence, Machine Learning, Cyber Security, Data Science , IoT உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட பாரம்பரிய பிரிவுகளை மட்டும் கொண்டு செயல்படும் 220 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் சுமார் 100 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இனி வரும் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயரும் என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிக்க: சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?.. பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!