கல்வி

அண்ணாமலை பல்கலை.யில் முதுகலைத் தேர்வில் ஆள் மாறாட்டம் - 7 ஆண்டுகளுக்குப்பின் விசாரணை

சங்கீதா

முதுகலை பட்டம் பெற தேர்வு எழுதாமல், முறைகேட்டில் ஈடுபட்ட 147 பேர் மீது சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த வழக்கு விசாரணை இன்று கடலூர் நீதிமன்றத்தில் தொடங்கியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், கடந்த 2015-ம் ஆண்டு முதுகலை பட்டத் தேர்வுக்காக பல்வேறு துறையில் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தேர்வு எழுதாமல் ஆள் வைத்து தேர்வெழுதியும், தேர்வு முடிந்தப் பிறகு கேள்வித்தாளை வைத்து அதற்கும் பதில் எழுதி, அந்த பேப்பர்களை தேர்வுத்தாள் வைத்துள்ள இடத்தில் ஆள் வைத்து முறைகேடாக சேர்த்துள்ளனர்.

இவையெல்லாம் அண்ணாமலை பல்கலைகழக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுசம்பந்தமாக அண்ணாமலை பல்கலைகழகம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 2015-ம் ஆண்டு விசாரணை மேற்கொண்டு, இதில் மாணவர்கள், புரோக்கர்கள், இதற்கு உதவி செய்த பல்கலைக்கழக ஊழியர்கள் என 147 பேர் மீது 420 உள்ளிட்ட 20 பிரிவின் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது.

அந்த வழக்கு விசாரணை இன்று முதல் முறையாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குறிப்பாக இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 147 பேரில், 3 பேர் உயிரிழந்து விட்டனர். 139 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு வரவழைக்கப்பட்டனர். 5 பேர் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை. ஆனால் விரைவில், அவர்களையும் விசாரணைக்கு அழைக்கப் போவதாக சிபிசிஐடி தகவலாக உள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை, இன்று கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜரானர்கள். இதனால் அதிக அளவு போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த விசாரணையை அடுத்த மாதம் நீதிபதி ஒத்திவைத்துள்ளார். முதுகலை பட்டம் பெற முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலர் ஆசிரியர்களாக பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.