கல்வி

எழுத்தறிவு தேர்வில் 100-க்கு 89 மதிப்பெண்கள் எடுத்த 104 வயதான கேரள மூதாட்டி

Veeramani

கோட்டயத்தைச் சேர்ந்த 104 வயதான கேரள மூதாட்டி குட்டியம்மா, கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் தேர்வில் 100-க்கு 89 மதிப்பெண்களைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த தகவலை கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதுடன், அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். "மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும், குட்டியம்மாவினை வாழ்த்துகிறேன்" என்று ட்வீட் செய்துள்ள அவர், முகத்தில் தொற்றிக் கொள்ளும் புன்னகையுடன் உள்ள குட்டியம்மாவின் புகைப்படத்தையும் தனது ட்வீட்டில் சேர்த்துள்ளார்.


கோட்டயம் மாவட்டம் ஆயர்குன்னம் பஞ்சாயத்தில் சக்ஷரதா எழுத்தறிவு சோதனை என்று அழைக்கப்படும் இந்த சோதனை ஏற்பாடு செய்யப்பட்டது.
எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்திற்கு வயது ஒரு தடையில்லை என்பதை குட்டியம்மா மீண்டும் நிரூபித்துள்ளார். குட்டியம்மா இதுவரை பள்ளிக்கு சென்றதில்லை, இதற்கு முன் அவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. வயது வெறும் எண் தான் என்பதை நிருபித்த குட்டியம்மாவுக்கு சக்ஷரதா பிரேரக் ரெஹ்னா என்ற பெண் படிப்பிற்கு உதவினார். எழுத்தறிவுத் தேர்வில் இவ்வளவு நல்ல மதிப்பெண்களைப் பெற்ற பிறகு குட்டியம்மா இப்போது 4-ஆம் வகுப்பில் படிக்க தகுதி பெற்றிருக்கிறார்.