குற்றம்

ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வதுபோல் கஞ்சா விற்றுவந்த நபர் -போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?

webteam
ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வதுபோல கஞ்சா டெலிவரி செய்துவந்த நபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 1 ¹/² கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம்(25). இவர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் தனியார்(ZOMATO) நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைனில் உணவு டெலிவரி மட்டுமின்றி கஞ்சா போன்ற போதைப்பொருட்களையும் விற்பனை செய்து வந்துள்ளார். மதுரவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக மதுரவாயல் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆலப்பாக்கம் பகுதியில் தனியார் உணவு டெலிவரி செய்யும் உடையுடன் சந்தேகத்திற்க்கிடமான வகையில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது உணவு டெலிவரி செய்யும் பையில் கஞ்சா வைத்திருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்ததில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்துகொண்டு கஞ்சா போன்ற போதைப்பொருட்களையும் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைதுசெய்த போலீசார் அவரிடமிருந்து 1 ¹/² கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த நிலையில், மேலும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.