தருமபுரி அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நலப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (23) என்பவர் கடந்த 23.01.2018 அன்று தருமபுரியில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது பெற்றோருடன் வந்த 4 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனைக் கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் செல்வத்தை பிடித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் செல்வம் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, செல்வத்திற்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார். இதனையடுத்து செல்வம் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.