சென்னையை அடுத்த நெமிலிச்சேரியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரயிலில் இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான முகநூல் பதிவுகள் வைரலாகியதையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த நெமிலிச்சேரி ரயில் நிலையத்திற்கு கைகளில் நீண்ட அரிவாள், கத்தி போன்றவற்றுடன் கூச்சலிட்டபடி இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்களை பார்த்த பொதுமக்கள் அச்சத்துடன் விலகி ஓடினர். அந்த இளைஞர்கள் ரயில் படியில் தொங்கியபடி, வெளியே கத்தியை நீட்டிக்கொண்டு வந்தனர். இதுமட்டுமில்லாமல் நடைமேடையில் பட்டாசுகளை கொளுத்தியும்,. பாட்டுப்பாடி கூச்சலிட்டும் பெரும் ரகளை செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என தகவல் பரவி வருவதையடுத்து, கல்லூரி சார்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்தவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்று உறுதியானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் காளிராஜ் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து திருவள்ளூர் இருப்புப்பாதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அம்பத்தூர் துணை ஆணையர் தலைமையிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் கத்தியோடு திரிந்த தண்டபாணி என்பவரை பட்டாபிராம் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் கிருஷ்ணன், ஜெகதீசன், யுவராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.