குற்றம்

காதல் திருமணத்தில் ஏற்பட்ட பகை : பழிக்குபழியாக இளைஞர் வெட்டிக் கொலை

காதல் திருமணத்தில் ஏற்பட்ட பகை : பழிக்குபழியாக இளைஞர் வெட்டிக் கொலை

webteam

திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருஈங்கோய்மலை கிராமத்தில் பட்டபகலில் வாலிபர் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருஈங்கோய்மலை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த தனது உறவினர் பெண்ணை சுரேஷ் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த காதல் திருமணத்திற்கு சுரேஷ் மனைவியின் தாத்தா அம்மையப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த தகராறில் சுரேஷ், தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து அம்மையப்பனை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், போலீசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த சுரேஷ், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜாமினில் வெளியே வந்துள்ளார். பின்னர், வெளியூரில் மனைவியுடன் அவர் வசித்து வந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று திருஈங்கோய்மலைக்கு சுரேஷ் வந்தபோது அவரது மனைவியின் குடும்பத்தினருக்கும் சுரேஷிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவியின் உறவினர்கள் சதீஷ்வரன் (30), மஞ்சுநாதன் (25), தனுஷ்கோடி (22) ஆகிய மூன்றுபேரும் சுரேசை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். 

இதுகுறித்து தகவலறிந்த முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நிகழ்வு இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். மேலும் கொலைவழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.