திண்டுக்கல் அருகே மதுக்கடையில் மதுவை தட்டிப்பறித்ததால் பூண்டி சரவணன் என்ற ரவுடியை தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் முன்பு தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர், சின்னாளபட்டியை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள ரவுடி பூண்டி சரவணன் என்பது தெரியவந்தது. இவர்மீது திருப்பூர் , கோவை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் 2014 குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதாகி வெளியே வந்தவர்.
இந்த கொலை குறித்து திண்டுக்கல் புறநகர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் வினோத் சின்னாளபட்டி காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான குழு அரசு மதுபான கடை முன்பு இருந்த சிசிடிவி கேமராவை வைத்து விசாரணை செய்தது. அப்போது சின்னாளபட்டி பழைய காவல்நிலையம் அருகில் வசித்துவரும் கோபி என்ற நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து 2 மணிநேரத்தில் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில், “மதுக்கடையில் மது அருந்தியபோது தன்னிடம் பூண்டி சரவணன் அடித்து மதுவை பறித்தார். இதனால் ஆத்திரத்தில் நள்ளிரவில் மது போதையில் மயங்கிய நிலையில் பூண்டி சரவணனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.