மதுரை அருகே இளம்பெண்ணை கொலை செய்த கொலையாளியை, சமூக வலைதளங்களின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி பகுதியில் கடந்த 29ஆம் தேதி முகம் சிதைக்கப்பட்டு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோனைக்கு அனுப்பிய காவல்துறையினருக்கு துப்பு ஏதும் கிடைக்காததால், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் பெண்ணின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பரப்பியுள்ளனர். இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பெண், சிவகங்கை மாவட்டம், ஆவாரங்காட்டை சேர்ந்த சந்திரனின் மகள் வனிதா என தெரியவந்தது.
மானாமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சாக்ரடீஸ் என்பவருடன், வனிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சாக்ரடீஸ் தனது நண்பர் ஒருவருடன் வனிதாவையும் அழைத்துக்கொண்டு சென்று மதுரையில் மது அருந்தியுள்ளார். பின்னர் சிந்தாமணி சுங்கச்சாவடி பகுதியில் வனிதாவிடம் இருவரும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதற்கு வனிதா மறுக்கவே, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, இருவரும் தப்பிச்சென்றுள்ளனர். வழக்கறிஞர் சாக்ரடீஸ் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழங்குகள் உள்ளன. இந்நிலையில் சாக்ரடீஸை கொலை செய்த காவல்துறையினர், அவரது நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.