கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி என்பவரின் மகன் ராம்சரண் என்கிற ராம்குமார். இவர், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். சமீபத்தில் அந்த சிறுமி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்னர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்தபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும், அதே ஊரைச் சேர்ந்த ராம்சரணுடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குழந்தை பிறக்கும் நாள் நெருங்கிய உடன் ராம்சரண் அந்த சிறுமியை விட்டுவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடந்த பல மாதங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர். அதன் பிறகு சொந்த ஊருக்கு வந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ராம் சரணை சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய போது அவர் மறுத்ததுடன் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் மனு அளித்ததுள்ளார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்த இளைஞர் ராம்சரண் மீது காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்து குழந்தையுடன் சிறுமியை தவிக்க விட்ட இளைஞர் ராம்சரணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.