பிச்சை எடுப்பது போல் நடித்து அடுக்குமாடி குடியிருப்புகளில் கொள்ளையடித்த பெண்ணை பொதுமக்கள் அடித்து காவலரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த முத்தமிழ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பானுமதி(53). இவர் நேற்று மாலை துணி காய வைப்பதற்கு வீட்டின் மாடிக்கு சென்றிருக்கிறார். அப்போது ஒரு பெண் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகன் திருமணத்திற்கு மடிபிச்சை வேண்டும் என கேட்டிருக்கிறார். இல்லை என்றவுடன் அருகில் உள்ள வீட்டின் கதவை தட்டியிருக்கிறார் கதவை சாத்தப்பட்டிருப்பதை அறிந்தவுடன் அந்த வீட்டில் புகுந்து பணம், ஆவணங்கள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து மூட்டைக்கட்டிக் கொண்டு மற்றொரு வீட்டின் கதவை திறக்க ஸ்குரு டரைவர் மூலம் முயற்சி செய்து கொண்டிருந்திருந்துள்ளார்.
அப்போது துணி காயவைத்து விட்டு கீழே வந்து பார்த்த பானுமதி, யார் நீ? என்று கேட்க, மாட்டிக் கொள்வோம் என சுதாரித்துக் கொண்ட பெண், பானுமதியின் தாலிச் செயினை பறித்து கொண்டு தப்பியோட முயன்றிருக்கிறார். பானுமதியின் அலறல் சத்தம் கேட்டு கீழ் தளத்தில் உள்ள ராஜேஸ்வரி என்பவர் பிச்சை எடுப்பது போல் நடித்த பெண்ணை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த போலீஸார், அந்தப் பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் மேகலா(47) என்பதும் ஆதம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் ஆள் இல்லாத வீட்டில் திருடுவதை வழக்கமாக கொண்டவர் என்பதும், கடந்த மாதமாக நோட்டமிட்டு இந்தக் குடியிருப்பில் திருடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
(தகவல்கள்: சாந்த குமார், புதிய தலைமுறை செய்தியாளர், தாம்பரம்)