குற்றம்

கோவை சிறுமி வன்கொடுமையில் மேலும் ஒருவருக்கு தொடர்பா?: புதிய பெண் அதிகாரி நியமனம்

webteam

கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு நபரின் தொடர்பு குறித்து விசாரணை செய்ய புதிய பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த மார்ச் மாதம், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கில் குற்றவாளியான தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே சிறுமியின் பாலியல் வன்கொடுமையில் மற்றொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக டிஎன்.ஏ சோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இதுகுறித்து மேல் விசாரணை செய்யக்கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், தகுதியான திறமையான பெண் அதிகாரியை நியமனம் செய்து விசாரிக்க மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டது. அதன்படி எஸ்.பி.சுஜித்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி அனிதா, டிஎஸ்பி மணி ஆகியோரின் மேற்பார்வையில் கோவை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி துடியலூர் சிறுமியின் வழக்கு தொடர்பாக விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான விசாரணைகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரி அனந்தநாயகி இந்தாண்டு தமிழக முதலமைச்சரின் சிறந்த புலன் விசாரணை அதிகாரிக்கான பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.