கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் பெயரை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி (28). இவர், மின்சாரத் துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய்சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சௌமியா காந்திகிராமம் பகுதியில் இருப்பதை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர், பல மாவட்டங்களில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், கரூர் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், மற்றும் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கரூர் மாவட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.