தமிழக பாஜக தலைவர் தமிழிசையை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருப்பவர் தமிழிசை சவுந்தரராஜன். இவரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து தமிழிசையை அவதூறாக பேசிய அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசாரிடம் பாஜக நிர்வாகிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெண்களை அவதூறாக பேசுவதால் அவர்கள் பொதுவாழ்விற்கு வருவதற்கே அச்சமான சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தங்கள் புகார் மனுவில் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தமிழிசையை தரக்குறைவாக விமர்சித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சூர்யா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.