குற்றம்

அண்ணிகளின் தாங்கமுடியாத கொடுமை... திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

Sinekadhara

மும்பையில் அண்ணிகள் தொடர்ந்து அவமானப்படுத்தி துன்புறுத்தியதாக கூறி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜால்கோனைச் சேர்ந்தவர் ஹர்ஷாலி. இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டார்டோவைச் சேர்ந்த நபருடன் திருமணமாகி இருக்கிறது. கணவன் வீட்டுக்கு வந்த மறுநாளே கணவனின் சகோதரிகள் தாங்கள்தான் திருமணத்திற்கு செலவு செய்ததாகக் கூறி ஹர்ஷாலியிடம் மோசமான நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உறவினர்களிடமும் கூறி அந்தப் பெண்ணை ஒதுக்கி வைத்திருக்கின்றனர்.

இந்தநிலை தொடர்ந்து நடந்திருக்கிறது. ஒருநாள், ஹர்ஷாலியின் அண்ணிகள் 10 வருடங்களுக்கு முன் இறந்துபோன மாமியாரின் பழைய புடைவையை கட்டும்படி வற்புறுத்தி இருக்கின்றனர். அந்த புடைவை துவைக்காமல் அழுக்காக இருந்ததால் துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே ஹர்ஷாலி அதைக் கட்ட மறுத்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அண்ணிகள் ஹர்ஷாலியை அடித்து கொடுமைப்படுத்தியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த ஹர்ஷாலி, கணவர், மாமனார் மற்றும் மைத்துனர் அனைவரும் ஐபிஎல் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலை 5.30 மணியளவில் ஹர்ஷாலியின் மாமனார் வீட்டுக்குள் செல்ல கதைத் தட்டியிருக்கிறார். நீண்டநேரம் கதவைத் திறக்காததால், உடைத்து உள்ளே சென்றிருக்கின்றனர். அப்போதுதான் ஹர்ஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது.

இதனால் கோபமடைந்த ஹர்ஷாலியின் தந்தை டார்டோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அதில், தனது மகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால்தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும், குற்றவாளிகள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.