குற்றம்

ஜெயிலுக்குள் இருந்த உறவினரைப் பார்க்க கஞ்சா கொண்டுவந்த பெண் கைது

ஜெயிலுக்குள் இருந்த உறவினரைப் பார்க்க கஞ்சா கொண்டுவந்த பெண் கைது

Sinekadhara

பூவிருந்தவல்லி சிறையில் கைதியை பார்க்க வந்த இளம்பெண் பிஸ்கெட்டை துளையிட்டு அதில் கஞ்சா வைத்து கொண்டுவந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூவிருந்தவல்லி அடுத்த கரையான்சாவடியில் தனிக் கிளைசிறை அமைந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் எண்ணூரில் நடந்த கொலை வழக்கு சம்பந்தமாக கார்த்திக் என்பவரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று மாலை இவரை பார்ப்பதற்காக இவரது உறவுக்காரப் பெண் வளர்மதி(21) என்பவர் வந்துள்ளார். அப்போது பிஸ்கட், பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளார். அதனை போலீசார் பரிசோதனை செய்தபோது பிஸ்கெட்டை துளையிட்டு அதில் கஞ்சாவை மறைத்துவைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

போலீசார் கண்ணில் மண்ணை தூவி கஞ்சாவை சிறைக்குள் கொண்டு சென்றதை போலீசார் லாவகமாக கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த பெண் பூவிருந்தவல்லி போலீசாரிடம் சிறைக்காவலர்கள் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கஞ்சா எடுத்து வந்த பெண் கார்த்திக்கின் உறவினர் என்பதும் பிஸ்கெட்டுக்குள் 50 கிராம் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்ததையும் ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் இருக்கும் உறவினரைப் பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன், சிம்கார்டுகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.