தனலட்சுமி
தனலட்சுமி file image
குற்றம்

'சிம்கார்டுடன் சேலம் மத்திய சிறைக்குச் சென்ற பெண்' - ஷாக் ஆன போலீஸ்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி?

PT WEB

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் வழிப்பறி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களாகச் சிறையில் இருக்கும் பிரேம்குமாரை பார்க்க அவரது தாயார் தனலட்சுமி மற்றும் முன்னாள் சிறைவாசி குணசீலன் ஆகிய இருவரும் மத்திய சிறைக்குச் சென்றுள்ளனர்.

சிறை

அப்போது அவர்கள் கொண்டு சென்ற பைகளை சிறைக் காவலர் பூபதி சோதனை செய்துள்ளார். அதன் முடிவில் தனலட்சுமி கொண்டு சென்ற பையிலிருந்த சட்டை பாக்கெட் ஒன்றில் இரண்டு சிம்கார்டு மற்றும் 1 மெமரி கார்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சிறைத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து தனலட்சுமி மற்றும் முன்னாள் சிறைவாசி குணசீலன் மீது அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் சிறைத்துறை காவலர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி பிணையில் அனுப்பி வைத்தனர்.

தனலட்சுமி மற்றும் குணசீலன்

இதற்கிடையே சிறையில் இருக்கும் பிரேம்குமாரிடம் சிறை கண்காணிப்பாளர் வினோத் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் செல்போன் எதுவும் சிறையில் பதுக்கி வைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் பிரேம்குமார் பெரும்பாலும் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என்றும், அவர் திருடும் கைப்பேசிகளிலிருந்து சிம்கார்டு, மெமரி கார்டினை உடனடியாக கழட்டி சட்டை பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அப்படி அவரது உடையில் தவறுதலாக சிம்கார்டு இருந்திருக்கலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.