கோவையில் குடும்பத் தகராறில் கத்தியால் குத்தி கணவனைக் கொலை செய்துவிட்டு, எதிர்பாராதவிதமாக கத்தி பட்டு உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் பிரிட்டோ(40). இவர் பீளமேடு பகுதியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கரோலின் (31) என்பவருடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே பிரிட்டோ கழுத்து, வயிறு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கணவர் பிராங்க்ளின் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சமையலறையில் காய்கறி நறுக்கி விட்டு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பின்னால் நின்ற கணவனின் மார்பு பகுதியில் கத்தி பதிந்ததாகவும் மனைவி கரோலின் காவல்துறையினரிடம் தெரிவித்தார். ஆனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், கரோலினிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது குடும்பத் தேவைக்காக அடமானம் வைத்த தாலியை மீட்டுத் தரக்கோரி ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு நாடகமாடியதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கரோலினை காவல் துறையினர் கைது செய்தனர்.