குற்றம்

சேலம்: நிலப்பிரச்னை வழக்கில் 44 ஆண்டுகளாக தலைமறைவு; மூவர் கைது

சேலம்: நிலப்பிரச்னை வழக்கில் 44 ஆண்டுகளாக தலைமறைவு; மூவர் கைது

JustinDurai
சேலம் மாவட்டத்தில் நிலப்பிரச்னை தொடர்பான வழக்கில் 44 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் வத்தியூர் பகுதியை சேர்ந்தவர் ஞானம்மாள். இவருக்கு சுமார் நூறு ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இதில், 18 ஏக்கர் நிலத்தை 1977-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பழனியப்பனுக்கு விற்றதாக தெரிகிறது. பின்னர் ஞானம்மாள், அதே நிலத்தை வேறு ஒருவருக்கும் விற்றதாக புகார் எழுந்தது.
ஒரே நிலத்தை இருவருக்கு விற்பனை செய்த விவகாரத்தில் இருதரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஞானம்மாள், வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, பழனியப்பன் தரப்பை தாக்கி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பழனியப்பன், 1977-ம் ஆண்டே தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் ஓமலூர் அருகேயுள்ள புதூர் காடம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், வெள்ளக்கல்பட்டி பாமன்கரடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, அவரது மனைவி அலமேலு உள்பட 16 பேர் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையை கிருஷ்ணன், சுப்பிரமணி, அலமேலு ஆகியோரை தவிர மற்ற அனைவரும் முடித்துக் கொண்டனர். ஆனால், இவர்கள் 3 பேர் மட்டும் வழக்கை முடிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளனர். இவர்கள் மூவர் மீது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிடிவாரண்டு பிறப்பித்தும், தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்தநிலையில் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார், தலைமறைவாக இருந்த கிருஷ்ணன், சுப்பிரமணி, அலமேலு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். சுமார் 44 ஆண்டுகளாக நிலத்தகராறு வழக்கை முடிக்காமல் இழுத்தடித்ததால் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கணவன், மனைவி உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.