குற்றம்

விருதுநகர்: போக்சோ வழக்கில் தேடப்பட்ட நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

விருதுநகர்: போக்சோ வழக்கில் தேடப்பட்ட நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மூன்று சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் பாலவநத்தம் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர், அதே ஊரை சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு தன்னுடைய செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்ததாக அச்சிறுமிகளின் பெற்றோர் கடந்த 20ஆம் தேதி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் தன்மீது புகார் அளித்ததை அறிந்த ஆறுமுகம் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக வீட்டிலிருந்து தப்பி ஓடினார். சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகத்தை சூலக்கரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பாலவநத்தம் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது சூலக்கரை போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆறுமுகம் என தெரியவந்தது. போலீசாரின் விசாரணைக்கு பயந்து ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை யாரேனும் கொலை செய்து அவரை தூக்கில் தொங்க விட்டுள்ளனரா என தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்