குற்றம்

மதுரை: அவனியாபுரத்தில் தொடரும் கால்நடை வன்முறை; 7 நாய் குட்டிகளை விஷம் வைத்த கொன்ற கொடூரம்

நிவேதா ஜெகராஜா

மதுரையில் கடந்த சில நாட்களாகவே கால்நடைகளின் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று மாதத்தில் அவனியாபுரம் பகுதியில், 21 நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் இந்த வன்முறை சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதை தொடர்ந்து, ஐந்து வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது தவிர பசுமாட்டின் மீது ஆசிட் வீசுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் அப்பகுதியில் நடைபெற்றுள்ளது. இது போன்று கால்நடைகள் மீது நடைபெறும் வன்முறை சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில், பிறந்து சில தினங்களே ஆன ஏழு நாய்க்குட்டிகள் தற்போது கொல்லப்பட்டுள்ளன. அவை அப்பகுதியில் சுற்றத்திரிந்து வந்ததாகவும், அப்பகுதி மக்கள் சில நபர்களுக்கு இடையூறாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அந்த ஏழு குட்டி நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளனர்.

இதனால் இன்று காலை ஏழு நாய்க்குட்டிகளும் துடிதுடிக்க இறந்த நிலையில் கிடந்தன. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும் விலங்கு நல ஆர்வலர்களுக்கும், கால்நடை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் விசாரணையானது மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

- அசோக் சக்கரவர்த்தி