செய்தியாளர்: காமராஜ்
திருவென்னைய்நல்லூர் அருகேயுள்ள ஆனத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் சத்யானந்தன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் மரக்காணத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி மதன்குமார் என்பதும் சாராய விற்பனை செய்ய முடியாததால் குட்காவை பெங்களுருலிருந்து கடத்தி வந்து ஆனத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வீட்டில் பதுக்கப்பட்ட 280 கிலோ குட்கா, ஒரு இருசக்கர வாகனம், ஆறு செல்போன்கள் மற்றும் 71 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து குட்டகா கடத்தலில் ஈடுபட்ட மதன்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.