செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் வாசுகி (61) அவரது கணவர் ஆதிகேசவன், மகன் தங்கத்துரை ஆகிய 3 பேரும் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் வானூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 75 பேர் கடந்த 20.10.2021 முதல் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் 10 ஆயிரம் வீதம் 20.7.2024 வரை 33 மாதங்கள் பணம் செலுத்தியுள்ளனர்.
இதையடுத்து சீட்டு முடிந்த நிலையில், தள்ளு பணத்தை தவிர மீதமுள்ள தொகையான 51 லட்சத்து 35 ஆயிரத்தை தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வாசுகியிடம் பலமுறை சென்று, பணத்தை தரும்படி கேட்டும் பணத்தை கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
அந்தப் புகாரின் பேரில் வாசுகி, தங்கத்துரை, ஆதிகேசவன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகியை கைது செய்தனர். இதையடுத்து தலைமறைவான வாசுகியின் கணவர் ஆதிகேசவன், மகன் தங்கத்துரை ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.