விழுப்புரத்தில் ஆராயி என்பவரின் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தி, அவரது 9 வயது மகனை கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் 1 மாதம் தலைமறைவாக இருந்த கொலையாளி காவல்துறை வசம் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. வயது 45. தனது கணவரை இழந்துவிட்ட ஆராயிக்கு மொத்தமாக 6 குழந்தைகள். கணவரின் வருமானம் இல்லாதக் காரணத்தினால் வெவ்வேறு இடங்களில் தனது 4 குழந்தைகளைக் கூலித்தொழிலுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் ஒரு மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 22ம் தேதி ஆராயி தனது மகள் மற்றும் மகனுடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்க, வீட்டில் புகுந்த மர்ம நபர் யாரோ ஆராயி மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளை சரமாரியாக தாக்கியது. ஆராயி வீட்டில் இருந்து முணுமுணுப்பு சத்தம் கேட்க, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரின் வீட்டிற்குச் சென்று பார்த்திருக்கின்றனர். அங்கு ஆராயி குழந்தைகளுடன் இரத்த வெள்ளத்தில் மிதந்திருக்கிறார். மேலும் அவரின் 14 வயது மகள் அரைகுறை ஆடையுடன் கிடந்த நிலையில் கிடந்திருக்கிறார். மேலும் ஆராயின் மகனும் கொலை வெறித் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். தனிப்படைகள் அமைப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தாண்டியும் யாரும் கைது செய்யப்படாமல் இருந்தது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முதல் முறையாக ஆராயி வழக்கில் ஒரு நபரை கைது செய்துள்ளனர். அது எப்படி என்பது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, “ வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி (46). அவரது மகள் தனம் (13) மற்றும் ஆராயி மகன் சமயன் (09) ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினோம். சிறுவன் உயிரிழந்ததால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக உள்ளூர் மற்றும் பழைய குற்றவாளிகள் உள்பட 300 பேரை தணிக்கை செய்தோம். மேலும் சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்கள் குறித்தும் தணிக்கை செய்தோம். இதனிடையே இந்த வழக்கில் நடந்ததை போன்று ஏற்கெனவே நடைபெற்ற சம்பவத்தில் தில்லைநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து 2016ம் ஆண்டு வெளியானதும் தெரியவந்தது. எனவே அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டபோது இந்த சம்பவத்திற்கு பின் அவர் தலைமறைவாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
எனவே தில்லைநாதன் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினோம். தில்லைநாதன் சிறையில் இருந்தபோது மணம்பூண்டி பகுதியைச் சேர்ந்த படையப்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் படையப்பாவை பார்ப்பதற்காக அடிக்கடி திருக்கோவிலூர் சென்று வந்துள்ளார் தில்லைநாதன்.
அப்படித்தான் கடந்த 22-ம் தேதி ஆராயி வீட்டில் நுழைந்த தில்லைநாதன் ஆராயி மற்றும் அவரது மகளை கடுமையாக தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார். மேலும் தில்லைநாதன் தாக்குதலில் ஆராயி மகன் உயிரிழந்துவிட்டார்.
கொள்ளையடிக்கும்போது லுங்கி மற்றும் சட்டையை மட்டுமே அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் தில்லைநாதன். ஆனால் வீட்டினுள் நுழையும்போது லுங்கி மற்றும் சட்டையை தனியாக கழற்றிவைத்து விட்டு வெறும் ஜட்டியுடன், கையில் இரு இரும்பு கம்பியையும் கொண்டு செல்வதே வழக்கம் . பின்னர் தன் கையில் உள்ள இரும்பு கம்பியால் நபர்களை தாக்கி குற்றச் சம்பவத்தை அரங்கேற்றுவார். குற்றம் வெளியே தெரியாமல் இருக்க செல்போன் பயன்படுத்துவதும் இல்லை. சில இடங்களில் நகை, பணத்தை கொள்ளையடிப்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். இதுதவிர தில்லைநாதனுக்கு தனது வீடருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணிடமே தான் கொள்ளைடியக்கும் பணத்தை விற்றோ அல்லது அடகு வைத்தோ ஜாலியாக வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார் தில்லைநாதன்.
கடந்த 2017ம் ஆண்டு திருக்கோவிலூர் அருகே இரண்டு பெண்களை கம்பியால் தாக்கி குற்றச் செயல் புரிந்துள்ளார் தில்லைநாதன். இதேபோன்று திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் பெண்களை தாக்கி நகைகளை பறிப்பதோடு குற்றச்செயலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இன்னும் திருமணம் ஆகாத தில்லைநாதன் ஒவ்வொரு செயலையும் தனியாகத் தான் அரங்கேற்றி வந்திருக்கிறார். பகல் நேரங்களில் அமைதியாக இருந்துவிடும் தில்லைநாதன் இரவு நேரங்களில் தான் பொதுவாக குற்றச் செயலலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.” என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.