குற்றம்

விழுப்புரம்: ஃபேஸ்புக் நண்பரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளை... 3 பேர் கைது

kaleelrahman

ஆரோவில் அருகே ஃபேஸ்புக்கில் பழக்கமான வாலிபரை கத்தியை காட்டி, மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேயுள்ள குயிலாப்பாளையம் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (20). இவர், தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், கடலூர் மோகன் தெருவை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவருக்கும் ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று இரவு வாஞ்சிநாதன், சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு, உனக்கு புதிய மொபைல்போன் வாங்கி வைத்துள்ளதாகவும், இரவு புதுச்சேரி - திண்டிவனம் பைப்பாஸ் சாலையில் உள்ள மாட்டுக்காரன் சாவடிக்கு வந்து வாங்கி செல்லும்படி கூறியுள்ளார். அதை நம்பிய சந்தோஷ்குமார் அங்கு வந்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த வாஞ்சிநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளான முதலியார்பேட்டையை சேர்ந்த வெற்றி (20), யோகேஷ் (24) ஆகியோர் சந்தோஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த செயின் மற்றும் இரண்டாயிரம் ரொக்கப்பணத்தை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியைடந்த சந்தோஷ், ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, குயிலாப்பாளையத்தில் பதுங்கியிருந்த வாஞ்சிநாதன் மற்றும் வெற்றி லோகேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்பு அவகளிடம் இருந்த செயின் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வெற்றி யோகேஷ் இருவரின் பேரில் புதுச்சேரி காவல் துறையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.