குற்றம்

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு - 6 காவலர்களுக்கு 20-ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல்

ச. முத்துகிருஷ்ணன்

விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி காவலர்களால் கைது செய்யப்பட்ட ஆறு காவலர்களையும் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி அதிகாலை கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக விக்னேஷ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் விக்னேஷ் வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்ட நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. விக்னேஷின் உடற்கூராய்வில், அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது.

இதில் தொடர்புள்ள தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையின் தீபக், உதவி ஆய்வாளர் கணபதி, நிலைய எழுத்தர் முனாஃப், வாகன ஓட்டுநர் கார்த்திக், தலைமைக் காவலர் குமார், மகளிர் காவலர் ஆனந்தி ஆகிய 9 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர், காவலர்கள் 6 பேர் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம் முன் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். 6 காவலர்களையும் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.