குற்றம்

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு - இரண்டு காவலர்கள் கைது

ஜா. ஜாக்சன் சிங்

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில், காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை முதல் நள்ளிரவை தாண்டி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்ட 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷின் சந்தேக மரண வழக்கில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த 12 பேரை விசாரணை வளையத்தில் கொண்டுவந்திருக்கிறது சிபிசிஐடி.

இந்நிலையில், நேற்று காலை 11 மணி முதல் நள்ளிரவை தாண்டி விசாரணை நீடித்த நிலையில் காவலர் பவுன்ராஜ், காவல் நிலைய எழுத்தர் முனாஃப் ஆகியோரை விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வாகனச் சோதனையின் போது விக்னேஷை காவலர் பவுன்ராஜ் தாக்கியதும், பின்னர் காவல் நிலையத்தில் வைத்து எழுத்தர் முனாஃப் தாக்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர்கள் புகழும் பெருமாள், கணபதி, தலைமைக் காவலர் குமார், மகளிர் காவலர் ஆனந்தி, ஊர்க்காவல் படை வீரர் தீபக், வாகன ஓட்டுனர் கார்த்திக் உள்ளிட்டோர் சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இருக்கின்றனர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் காவலர்கள் இருவர் கைதாகி உள்ள நிலையில் மேலும் கைது நடவடிக்கைகள் தொடர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.