குற்றம்

கொடைக்கானலில் தீக்குளித்த பெண் மரண வாக்குமூலமாக பேசி பதிவிட்ட வீடியோ ஒப்படைப்பு

கொடைக்கானலில் தீக்குளித்த பெண் மரண வாக்குமூலமாக பேசி பதிவிட்ட வீடியோ ஒப்படைப்பு

webteam

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கேசி பட்டியில், மாலதி என்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரத்தில், மரணத்திற்கு முன்னர் பேசிய வீடியோ அடங்கிய செல் பேசிகளை கிராம மக்கள், தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு ஆய்விற்கு வந்த காவல் கண்கானிப்பாளர் ரவளி பிரியாவிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கேசி பட்டியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், மாலதி என்ற பெண் ஒருவர் திருமணத்தை தாண்டிய உறவில் ஏற்பட்ட மனக்கசப்பில், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீக்குளிக்கும் சம்பவத்தை அவருடன் தொடர்பில் இருந்த சதீஷ் என்பவரது அண்ணன் வீடியோ எடுத்து, சமூக வலைதலங்களின் பரவவிட்டார்.

இதனை அடுத்து இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அப்பெண், தான் தற்கொலை செய்வதற்கு முன்னர், மரண வாக்குமூலமாக பேசி பதிவிட்ட வீடியோ அடங்கிய செல்பேசிகளை, தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட கண்கானிப்பாளர் கூறுகையில், மரண வாக்குமூலம் அடங்கிய வீடியோவை, சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.