கைது கோப்புப்படம்
குற்றம்

வேலூர் | ”நாங்க போலீஸ்.. ” பேராசிரியர் வீட்டில் நூதன திருட்டு - இரண்டே நாளில் கும்பல் கைது

போலீஸ் எனக் கூறி பேராசிரியர் வீட்டில் சோதனை செய்வது போல் நடித்து 17 சவரன் நகை, லேப்டாப், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற டம்மி போலீஸ். சோதனையின் போது ரியல் போலீஸிடம் சிக்கிய கும்பல்.

PT WEB

செய்தியாளர்: ச.குமரவேல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பேராசிரியர் லட்சுமி பிரியா (40). இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை 08.02.2025) இவரது வீட்டிற்கு வந்த ஆறு பேர் "நாங்கள் போலீஸ்.. உங்கள் வீட்டை சோதனையிட வந்துள்ளோம்" எனக் கூறி போலியான அடையாள அட்டையை காண்பித்துள்ளனர்.

Arrested

இதனை அடுத்து தனது வீட்டில் உள்ள 17 சவரன் நகை, பணம் லேப்டாப் உள்ளிட்டவற்றை பேராசிரியர் காண்பித்த போது அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பேராசிரியை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் நேற்று (09.02.2025) புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஆற்காடு நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து செய்யாறு சாலை சந்திப்பில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (41) என்பவரை பிடித்து விசாரித்த போது இவரோடு சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பேராசிரியர் வீட்டில் நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து ராஜசேகர் (41), காதர் (20), ஜெகன் (20), விக்னேஷ் (27), கார்த்திகேயன் (25), பிரகாஷ் (29) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 17 சவரன் தங்க நகைகள், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.